தென்றல் – 1

பாசத்துக்கும், வீரத்துக்கும் மட்டும் அல்ல, பசுமைக்கும், வயலுக்கும் கூட பேர் போன ஊர் தான் நம் தென்றலூர். மதுரை மாவட்டத்துக்கும், தேனி மாவட்டத்துக்கும் இடையில், இருப்பதாலோ என்னவோ, சண்டைக்கும், சச்சரவுக்கும் மட்டும் அல்லாது வம்புக்கும், நக்கலுக்கும் கூட பஞ்சமிருக்காது. கள்ளமில்லாமல் பேசி சிரிக்கும் உறவுகள் இன்னமும் மிச்சமிருப்பதாலோ, என்னவோ கிராமம், இன்னமுமே அந்த அழகை விட்டுக் கொடுக்காமல், பசுமையாய் காட்சியளித்தது.

“மதுர மரிகொளுந்து வாசம், 

என் ராசாத்தி உன்னுடய நேசம்"

என்ற பாடல், அந்த அதிகாலைப் பொழுதில் ஊர் முக்கில் இருந்த டீக்கடையில் சத்தமாய் பாடிக் கொண்டிருந்தது.

“என்னலே, விடியங்காட்டியும் பெருசுங்களாம், சேர்ந்து பட்டறைய போடுறாங்க்ய, என்ன சேதி?” என்று டீக்கடையில் நின்று, காபியை உறிஞ்சியப்படி ஒருவன் கேட்டான்.

“ஊரு திருவிழா வருதுல்லண்ணே, அதான், கூடி பேசி என்னப் பண்ணலாம்னு பேசப் போறாக" என்றார் டீக்கடைக்காரன்.

“ஓ அப்படி போகுதா சேதி!. ஆமா, இந்த வருஷம் தலைக்கட்டு வீட்டுல இருந்து ஆரும் கலந்துக்குடுறாகளா?” என்று பேப்பரைப் பார்த்தப்படி இருந்த இன்னொருவன் கேட்டான்.

“ஏலே, அத ஏன் இங்க நின்னு கேட்டுட்டு இருக்கிறாப்ள? உமக்கு ஏதாவது சேதி வேணும்னா, அங்கப் போய் என்னென்னு பார்க்குறது" என்று துண்டை உதறியப்படி அங்கு வந்து சேர்ந்தார், அந்த ஊரின் பள்ளி வாத்தியார் தங்க முத்து.

அவரைப் பார்த்ததும், கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு விட்டு சிறு மரியாதையோடு, அந்த வாலிப கூட்டம் ஒதுங்கிப் போய் நின்றது.

“அதெப்டி வாத்தியாரே, இவனுங்க போவானுங்க? போன திருவிழாவுல, இவனுங்க கொடுத்த அலப்பறைக்கு, நம்ம கதிரண்ணே வசமா செஞ்சு விட்டுட்டாருல” என்று அவருக்கென்ற டீயை போட்டு அவரின் கையில் கொடுத்தான் டீக்கடைப் பையன்.

“அது சரி" என்று சொல்லியவர், அவன் கொடுத்த டீயை குடித்து விட்டு, வழக்கம் போல் ஒரு பன்னையும், ஒரு வடையையும் பேப்பரில் சுற்றி எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார் தங்க முத்து.

அவர் கிளம்பியதும் “ஏலே டீ டம்ளரு? என்ன நக்கலெல்லாம் பலமா கெடக்கு” என்று ஒருவன் அப் பையன் தலையில் தட்டியப்படி, அங்கிருந்த பட்டர் பிஸ்கட்டை எடுத்தான்.

அதில் அவன் அமைதியாகிவிட, சற்று தூரம் தள்ளி இருந்த பெரியவர்கள் எல்லாம் தங்களுக்குள் ஏதோ பேசியப்படி, அந்த ஊரின் பெரிய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“சங்கம் கலைஞ்சிருச்சி. அப்போ அடுத்த பட்டறை பெரிய வீட்டுலத்தான்" என்று ஒருவன் சொல்ல, அதைப் பார்த்து புருவத்தை நெறித்த பாண்டி, அவனின் கூட்டாளிகளிடம், “போன தடவை மாதிரி இல்லாம, இந்த தடம் எல்லாத்துக்கும் சேர்த்து பெருசா ஏதாச்சும் பண்ணிவிடனும்டா” என்று மீசையை முறுக்கிக் கொண்டான்.

அங்கே அந்த பெரிய வீட்டு முற்றத்தில் ஒற்றைக் கால் மடக்கி குத்துக் காலிட்டு, கோலத்திற்கு பத்து புள்ளி வைக்க வேண்டுமா? இல்லை இன்னும் ரெண்டு புள்ளி சேர்த்து வைக்க வேண்டுமா? என்ற யோசனையில் கட்டியிருந்த பாவடையை சற்று தூக்கி சொருகியப்படி, உதட்டில் விரல் வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா (எ) நிலா தென்றல்.

பார்த்தவுடன் சொக்கிப் போக வைக்கும் மீன் விழிகளுக்கு சொந்தக்காரி. அவளை எதிர்த்து பேச வருபவர்கள் கூட, அவள் குழந்தை முகத்தின் முன் ஒரு நொடி தயங்கித்தான் நிற்பார்கள். சிறிதாய் ஒரு சொல் கடுமையாய் பேசினாலும், முகம் சிவந்து அழுது விடுவாள். அதன் பின் அவளை சமாதானப்படுத்த, தலைகீழாய் நின்று தான் தண்ணீர் குடிக்க வேண்டும். தொட்டால் சினுங்கி. வாயைத் திறக்காமலே, தன்னை பேசியவரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கும் அளவுக்கு பொறுமை சாலி. பத்தாம் வகுப்புத்தான் படித்துக் கொண்டிருக்கிறாள். சிறு பெண் தான். வயதில் மட்டும் அல்ல, அவள் மனதளவிலும் சிறு பெண் தான். அவளுடன் சேர்ந்த பெண்கள் எல்லாம், இப்போதே கல்யாணம், காதல் என்று, கதை பேசிக் கொண்டிருக்க, அவளோ, இன்னமும் பொம்மை படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உலகம் என்ன என்று தெரியாத பாவை. சற்று பயந்த சுபாவம். அந்த பெரிய வீட்டின் இளவரசி. இன்னும் சொல்லப் போனால், அந்த மொத்த வீட்டின் உயிரும் அவள் தான். அவளுக்கு ஒன்று என்றால், அந்த வீட்டில் அத்தனைப் பேரும் துடித்துப் போவார்கள். 

“இன்னும் என்னத்தடி பண்ணிட்டு இருக்க? விடியக்காத்தால, கோலப் பொடி டப்பாவோட போனவ. கோலத்த போட்டீயா? இல்லையா?” என்று அந்த பெரிய வீட்டின் உள் இருந்த சமையற்கட்டில் இருந்து குரல் கொடுத்தார் செல்வி.

அவர் கொடுத்த சத்தம், அவள் செவியில் விழாத அளவுக்கு, அவள் கோலத்தில் மூழ்கிப் போயிருந்தாள். 

“என்னத்தா? என்னத்துக்கு காலையிலையே கத்திட்டு இருக்கிறவ?” என்று மீசையை நீவியப்படி, அங்கே முன்னிருந்த ஹாலில் வந்தமர்ந்தார் அந்த வீட்டின் மூத்தவர் சங்கரேயன்.

அவரைப் பார்த்ததும், வேகமாய் அவருக்கென்ற காபியை ஊற்றி, அவருக்கு கொடுக்க ஹாலுக்கு வந்தார்.

அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததிலேயே, அவள் யாரிடம் பேசிக் கொண்டிருப்பாள் என்பதை புரிந்தவர், “இன்னேரத்துக்குலாம்மா புள்ள எந்திச்சிருச்சு" என்று மணியைப் பார்த்தார்.

“அது வந்துங்கப்பா!” என்று செல்வி சொல்லும் போதே, “ஐயா, உங்களைப் பார்க்க ஊர் காரங்களாம் வந்துட்டு இருக்காங்க" என்று அந்த வீட்டில் வேலைப் பார்க்கும் முனியன் வந்து கூறினான்.

அதில் தன் மகளை திரும்பி ஒரு பார்வை பார்க்க, காபியை அவர் முன் வைத்து விட்டு அங்கிருந்து உள்ளே சென்றிருந்தார் செல்வி.

உள்ளே வந்த செல்வி, “ஊர் காரக எல்லாம் வராகளாம். இன்னும் இவ வாசல்ல நின்னு என்னத்த பண்ணிட்டு இருக்கான்னு தெரியலையே. இப்போ நம்மளும் வாசல் தாண்டி போ முடியாது. இவ ஆத்தாக்காரிக்கு மட்டும், இன்னேரத்துல இவ எந்திரிச்சு இங்க வந்தது தெரிஞ்சிச்சு. ஆஞ்சு புடுவாளே. இப்போ என்னப் பண்றது?” என்று விரலைப் பிசைந்தார்.

சரியாக அன்னேரத்துக்கு பின் கட்டு வழியே வீட்டில் வேலைப் பார்க்கும் ராணி அங்கு வந்தார்.

“ஹே புள்ள ராணி இங்க வாயேன்" என்று ரகசியமாய் அழைத்தார் செல்வி. அவருடைய ரகசிய குரலில், “என்னங்கம்மா! ரவையில என் மாமன் கூப்பிடுற மாதிரி கூப்பிடுறீக" என்று சிறு வெட்கத்துடன் கூறினாள் ராணி.

அவளின் வெட்கத்தில் தலையில் அடித்துக் கொண்ட செல்வி, “அடியே இவளே. ஏதாச்சும் வைஞ்சிட போறேன். எப்போ பாரு? மாமன், ரவையின்னு திரி. புதுசா கண்னாலம் ஆனவங்கள வீட்டுக்கு வேலைக்கு சேர்க்காதீகன்னு சொன்னா யாரு கேட்கிறா. எல்லா நேரமும், உன் மாமன் நெனப்புத்தானா?” என்று சீண்டலாய் சொன்னாலும், சற்று கோவமாகவே கூறினாள் செல்வி.

“அச்சோ, நீங்க இவ்வளவு வெசனப்படுற அளவுக்கு, இப்போ நான் என்ன சொல்லிப்புட்டேன்" என்று தலையை சொறிந்தாள் ராணி.

“அம்மா தாயே, உடனே மூக்கை உறிஞ்சிட்டு திரியாத. நான் எதுவும் சொல்லல. வெரசா போயி வாசல்ல, நம்ம நிலா இருப்பா, அவள நான் கூப்டேன்னு பின் கட்டு வழியா கூட்டியா. ” என்றாள் செல்வி.

“ஏன்மா?” என்று கேட்க தோன்றினாலும், இதற்கு மேல் தான் நகரவில்லை என்றால், செல்வி அவளை திட்டி தீர்த்து விடுவார் என்பது புரிய, அமைதியாய் அவள் சொல்லியதை செய்ய, வீட்டு வாசலுக்கு சென்றாள் ராணி.

ஆடி அசைஞ்சு நடப்பவளைப் பார்த்து “இவ கிட்ட ஒரு வேலை வாங்குறதுக்குள்ள, நம்ம மூச்சு நின்னுப்புடும்" என்று சொல்லியவர், வீட்டுக்கு வருபவர்களுக்கும் சேர்த்து காபியை கலக்க சென்றார்.

இங்கே வாசலில் நின்றிருந்த நிலாவின் அருகில் வந்த ராணியோ, “அடியாத்தி" என்று கொஞ்சம் சத்தமாய் சொல்லிவிட, ஏற்கனவே அரை இருளில் நின்றிருந்த நிலா சட்டென்று பயந்து, கையில் இருந்த கோல புத்தகத்தை தவறவிட்டிருந்தாள்.

“நான் தான் புள்ள. பயந்துட்டீயா?” என்று ராணி சொல்லி முடிப்பதற்குள்ளையே, அவளுடைய கரங்கள் நடுங்க ஆரம்பித்திருந்தது.

அதில், “ச் என்ன ராணி, எத்தன தடம் சொல்லியிருக்கேன். இப்படி பின்னாடி நின்னு கத்தாதன்னு” என்று சொல்லியப்படி குனிந்து புத்தக நோட்டை கையில் எடுத்தாள் நிலா.

“அது ஒன்னும் இல்ல புள்ள, எம்புட்டு மொனையா கோலம் போட்டிருக்க. அத பார்த்துத்தேன்" என்று ராணி அசடு வழிந்தாள்.

அதில் சட்டென்று மலர்ந்த நிலா, “நல்லா இருக்கா?” என்று ஆசையாய் கேட்டாள்.

“பின்ன, செல்விம்மா தினம் கோலம் போடுந்தேன். ஆனா, நீ எம்புட்டு அழகா போட்டிருக்க. இன்னிக்கு பூரா நின்னு பாத்துட்டே இருக்கலாம் போல” என்று ராணி வாயைப் பிளந்து அங்கே போடப்பட்டிருந்த பெரிய கோலத்தைப் பார்த்துக் கூறினாள்.

“ஆமாடி. சோழிய பார்க்காம, இப்படி நின்னு கதை பேச, உனக்கு கசக்கவா போது?” என்று சொல்லியப்படி அங்கு வந்தான் ராணியின் கணவன், குமார்.

அவரும் அங்குத்தான் தோட்ட வேலைப் பார்க்கிறார். எப்படியும் தன் மனைவி தனக்கு முன்னே வந்தாலும், வேலையை ஆரம்பித்திருக்க மாட்டாள் என்று தெரிந்தே, அவனின் பின்னே வர, அவர் நினைத்தது போலவே இன்னும் ராணி வீட்டிற்குள் கூட செல்லாமல் நின்றிருந்தார்.

கணவனைப் பார்த்ததும், சற்று பயந்து, “செல்விமா பின் கட்டு வழியா, உன்னை வெரசா வீட்டுக்குள்ள போ சொன்னாக” என்றாள் ராணி.

அதற்குள் ஊர் காரர்கள் வரும் சத்தம் கேட்கவும், “அடியே கூறு கெட்டவளே, இன்னும் என்னத்த என் மூஞ்ச பாத்துட்டு நிக்கிறவ, உள்ள போடி" என்று தன் மனைவியை சொல்லியவர், நிலாவிடம் மெதுவாய், “தங்கச்சி நீ உள்ள போத்தா” என்றான் குமார்.

“ம்" என்று தலையாட்டியவளுக்கு, இப்படி கூட்டமாய் நாலு பேரைப் பார்த்தாலும் பயம் தான்.

அப்படியே அவள் உள்ளே சென்று விட, ஊர் காரர்கள் வாசலை நெருங்கியிருந்தனர்.

“இன்னிக்கே பேசி முடிச்சாத்தான், வர்ற செவ்வாய்ல, முகூர்த்த கால் நட முடியும்" என்று தங்களுக்குள் சலசலத்தப்படி, ஊர் பெரியவர்கள் எல்லாம், அந்த வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

அதற்குள், “ட்ப்பூ. ட்பூ” என்ற புல்லட் சத்தம், அத்தனைப் பேரையும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் தடுத்திருந்தது. அதில் அத்தனைப் பேரும் சத்தம் வந்தப் பக்கம் திரும்பினர்.

அதில், “தம்பியே வந்துட்டார்ப் போல. ஐயாக்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி, தம்பிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கனுமோ?” என்று அப்போதே அத்தனைப் பேரும் யோசித்தப்படி தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.

அதற்குள், புல்லட் சத்தம் வெகு அருகில் கேட்க, அந்த பெரிய வீட்டின் கேட்டை, வேலையாள் வந்து திறந்து விட்டார். ஊர்காரர்கள் அத்தனைப் பேரும் வெளிப்பக்கம் பார்த்தப்படி நின்றிருந்தனர்.

வழக்கமாய் வீட்டின் முன் சென்று புல்லட்டை நிறுத்துபவன், ஹேட் வாசலில் போடப்பட்டிருந்த பெரிய கோலத்தைப் பார்த்து, அப்படியே வீட்டிற்குள் புல்லட்டை விடாமல், அங்கிருந்த வேப்ப மரத்தின் அருகில் சென்றான்.

ஒரு நொடி அந்த கோலத்தை புருவம் உயர்த்திப் பார்த்தவன், பின் புல்லட்டை சாய்த்து நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கினான் கதிர் (எ) கதிர் முகிலன்.

இந்த கதிர் யார்? அந்த நிலா யார்? இவர்கள் இருவரும் எப்படி வாழ்க்கையில் இணையப் போகிறார்கள், அந்தத் தென்றல், இந்த முகிலனின் சுவாசக் காற்றாய் மாறிப் போகுமா? இல்லை, அந்த தென்றல் புயலாய் மாறி, அந்த முகிலை மழையாய் மண்னில் கரைக்குமா? இப்படி அத்தனைக் கேள்விக்குமான பதிலை அடுத்தடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஆரம்பத்தில் சொன்னது போலவே, இந்த கதை என்னுடைய முதல் கிராமியக் கதை. அதனால் பிழைகள் இருந்தால் தாராளமாக சொல்லலாம். அதே போல் முதல் அத்தியாயம் எப்படி இருந்தது? என்பதை மறக்காமல் கமெண்டில் தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த கதை பிடிச்சிருந்தா, மறக்காம உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Author:    1 Sarmi SS
Comments   1

*** தென்றல் – 1 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com